பிரித்தானியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் “பிளான் சி” கட்டுபாடுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் “ஒமிக்ரான்” வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஏற்கனவே “பிளான் பி” கட்டுபாடுகள் அமலில் உள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் போதாது என்று கூறும் பிரித்தானிய அலுவலர்கள் “பிளான் சி” எனும் கூடுதல் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று “பிளான் பி” கட்டுபாடுகளை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். அந்த வகையில் வீடுகளிலிருந்து வேலை பார்க்க உத்தரவு, மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
ஆனால் “பிளான் பி” கட்டுப்பாடுகளால் வர்த்தக நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளது. ஏனென்றால் இந்த கடுமையான கட்டுப்பாடுகளால் வர்த்தகம் அதிக அளவில் பாதிப்படையும். அதிலும் குறிப்பாக கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆண்டின் வருவாய் அதிகரிக்கும் காலகட்டம் என்பதால் “பிளான் பி” கட்டுப்பாடுகளால் வர்த்தகம் மோசமாக பாதிப்படையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக “பிளான் சி” திட்டத்தின் கீழ் மேலும் சில கட்டுப்பாடுகளை புத்தாண்டில் விதிக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இனி விருந்தோம்பல் துறையின் கீழ் உள்ள இடங்களுக்கு செல்பவர்கள் தங்கள் முகவரி முதலான தகவல்களை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும். ஏனென்றால் கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தால் அவர்களை கண்டுபிடிப்பதற்கு NHS-க்கு வசதியாக இருக்கும். மேலும் மதுபான விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நுழைவதற்கு தடுப்பூசி பாஸ்போர்ட் உள்ளிட்ட மேலும் பல கட்டுப்பாடுகள் வருகின்ற புத்தாண்டில் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.