தமிழகத்தில் அரசு பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன்படி ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது. அந்தந்த துறைகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த தேர்வு எழுதுபவர்களின் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு ஆகும். இவ்வாறு நடைபெறும் குரூப்-4 தேர்வில் கிராம அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பணியிடங்கள் அடங்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த குரூப் 4 தேர்வு நடைபெறவில்லை.
இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் மொத்தம் 5,225 காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தேர்வை கட்டாயமாக்கியுள்ளது.
இந்த தமிழ்மொழி தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்றும் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்பின் குரூப்-4 தேர்வில் விருப்ப மொழிப்பாடம் பிரிவு நீக்கப்பட்டு தமிழ்மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனிடையில் முதற்பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இதில் 40 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அதுமட்டுமின்றி மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெரும் மதிப்பெண்களை கொண்டு கணக்கிடப்படும்.