சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் புனித நீராட கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் யாத்திரை சீசன் நவம்பர் மாதம் 16-ம் தேதியிலிருந்து தொடங்கியது. இதனிடையில் 2 மாதங்களுக்கு நீடிக்கும் இந்த சீசன் ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் முடிவடையும். இதில் டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் சிறிய இடைவெளி இருக்கும். ஆனால் சீசன் தொடங்கி இத்தனை நாட்கள் ஆகியும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஏனென்றால் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்களால் புனித நீராட முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று முதல் பக்தர்கள் சபரிமலை கோவிலில் புனித நீராடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பக்தர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள வழியிலேயே வந்து செல்லலாம் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் கேரள முதல்வர் பினராயி விஜயனோடு தேவசம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியபின் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.