அமெரிக்க அரசு, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்திருக்கிறது.
இலங்கை ராணுவம், அந்நாட்டில் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்த சமயத்தில், ஈழத்தமிழர்களை எதிர்த்து நடந்த கடைசிப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்தது. கடந்த 2009 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி அன்று விடுதலைப்புலிகளை எதிர்த்து நடைபெற்ற போர் முடிவடைந்தது.
இதில் தமிழர்கள் லட்சகணக்கில் கொல்லப்பட்டனர். எனினும் இலங்கை ராணுவத்தினர் இந்தப் போரின்போது பல குற்றங்களை செய்ததாக தெரியவந்தது. எனவே, இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, இலங்கையில் போர் தொடர்பாக நடைபெற்ற குற்றங்கள் தொடர்பில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு கடும் மனித உரிமை மீறல் குற்றங்களை செய்ததாக, சுனில் ரத்நாயக்கே மற்றும் சந்தன ஹெட்டியாராச்சி ஆகிய இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவர் உட்பட சுமார் 12 நாடுகளின் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கிறது.