தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தகுதித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை பெறப்பட்டது. இதனையடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது.
இதற்குரிய விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்துள்ளது. அதன்பின் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,060 விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்த திட்டமிட்டு விண்ணப்ப பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து டிசம்பர் 8 முதல் 12-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 8-ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுக்கான மையங்கள் விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்தில் இருந்து தொலை தூரங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால் உரிய நேரத்தில் தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கரூர் மாவட்டம் தளவாய் பாளையத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளதால் திருச்சி, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொலைதூரத் தேர்வு மைய ஒதுக்கீடு பிரச்சனை காரணமாக தேர்வினை ஒத்திவைத்த நிலையில் மீண்டும் இரு வாரங்களில் அதேபோன்று தொலைதூர தேர்வு மையங்களில் தேர்வு நடத்தியது ஏன் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தொலைதூரத் தேர்வு மையம் ஒதுக்கியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.