கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அந்த மாணவியை மிரட்டியுள்ளார். அதன் பிறகுதான் அந்த மாணவிக்கு பெண் போல் பழகியது வாலிபர் என்பதும், பெண் குரலில் அவருடன் பேசி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே அந்த மாணவியிடம் வாலிபர் நிர்வாணமாக வீடியோ அழைப்பில் வர வேண்டும் இல்லை என்றால் மார்பிங் செய்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து மாணவி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் வாலிபர் குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் நியாஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நியாசை கைது செய்ததோடு, அவரிடமிருந்து செல்போனையும் பறிமுதல் செய்து பார்த்தனர். அப்போது அந்த செல்போனில் பல்வேறு இளம் பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நியாசை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.