இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் குறிஞ்சி நகரில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருந்தார். இதில் சவுமியாவுக்கும் ஈரோடு மாவட்டம் கோபி சிறுவலூரை சேர்ந்த புவனேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சவுமியாவுக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை குணப்படுத்த சாமியாராக உள்ள உறவினர் ஒருவரை புவனேஷின் குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர்.
அப்போது சாமியாருக்கு அருள் வந்து சவுமியாவிடம் கூறியதாவது “உன்னுடைய நோய் தீர சிறப்பு பூஜை செய்ய வேண்டும். அதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். அந்த பணத்தை உன் பெற்றோரிடம் நீ வாங்கிவர வேண்டும். அதுவரை நீ உன் பெற்றோரிடம் பேசக்கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு சாமியார் கூறியதை நம்பிய சவுமியா கடந்த 1 1/2 மாதமாக பெற்றோரிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த சவுமியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சவுமியாவின் தந்தை ராஜன் சிறுவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சவுமியாவுக்கும், புவனேசுக்கும் திருமணம் முடிந்து 1 வருடமே இருப்பதால் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் போன்றோரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.