திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கூடுதலாக பக்தர்களை அனுமதிக்க வேண்டி மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு வருடந்தோறும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் திருப்பதி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தினசரி பூஜைகள் கோவில் வளாக ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன்பின் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டால் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாதம் 20-ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கும். கடந்த அக்டோபர் மாதம் திருப்பதியில் 2021-ஆம் வருடத்திற்கான பிரம்மோற்சவ விழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது. இதில் தினசரி 20,000 பக்தர்களுக்கு தேவஸ்தானம் முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து படிப்படியாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் பெய்த கனமழையால் திருப்பதி கோவில் முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளித்தது.
இதன் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று தேவஸ்தானம் தெரிவித்தது. அதன்பின் மழையாலேற்பட்ட தேசங்கள் சரி செய்யப்பட்ட பிறகு பேட்ஜ்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புத்தாண்டை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்க மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி கேட்க இருப்பதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் கனமழையால் மலைப்பாதையில் சாலைகள் சீரமைக்க 3.95 கோடி ரூபாய் மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை 3.60 கோடி ரூபாயிலும் சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.