ஒமைக்ரான் தமிழ்நாட்டை நெருங்கி வருவதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றில் இருந்து தப்பிக்க எளிய வழியும் உள்ளது.
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மீண்டும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவிவருகின்றது. இந்தியாவிலும் தற்போது வரை 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழக எல்லைகளில் மிகுந்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்ததாவது: ஒமைக்ரான் எந்த வடிவத்தில் வந்தாலும் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை ஒமைக்ரான் பெரிதும் பாதிக்காது.
எனவே நாள்தோறும் டிவியில் வரும் செய்திகளைப் பார்த்து அச்சப்படாமல் நாம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் சற்றும் தயக்கம் காட்டாமல் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவ முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.