நாய் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து அதை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காயங்களுடன் அந்த குரங்கு மயங்கி கிடந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கார் டிரைவரான பிரபு உடனே மயங்கி கிடந்த குரங்கை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்காக பிரபு குரங்கின் மார்பில் கை வைத்து அழுத்தியதோடு, குரங்கு வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்கொடுத்து முதலுதவி செய்தார். இதன் காரணமாக அந்த குரங்கு கண் திறந்து பார்த்தது. அதன்பின் அரசு கால்நடை மருத்துவமனையில் குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.