மேலாளர் செல்போன் கடை ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிந்துபூந்துறை பகுதியில் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பஷீர் என்பவரும் திருச்சியில் இருக்கும் செல்போன் கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த செல்போன் கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணிக்கு வந்து செல்லும் நேரம் தொடர்பாக செல்வத்திற்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பஷீர் மற்றும் மைதீனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் செல்வம் 2 பேரையும் அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.