தனியார் மொபைல் கடையில் விற்பனை பிரதிநிதிகள் 2 பேரை அரிவாளால் வெட்டிய மேலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முருகன் குறிச்சி பகுதியில் தனியார் மொபைல் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் செல்வம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதேபோன்று இந்த கடையில் தனியார் மொபைல் நிறுவனங்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக மைதீன் மற்றும் பஷீர் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே கடையில் மேலாளருக்கும், மொபைல் கம்பெனி பிரதிநிதிகளான மைதீன் மற்றும் பஷீர் இடையே கடைக்கு வேலைக்கு வந்து செல்லும் நேரத்தை பதிவு செய்யும் வருகைப் பதிவேடை பராமரிப்பதில் தொடங்கி சிறு சிறு விஷயங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விடுப்பில் சென்ற மேலாளர் செல்வம் திடீரென்று மதிய வேளையில் கடைக்கு வந்துள்ளார். அப்போது வழக்கம்போல் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மொபைல் போனை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் கடைக்குள் அமைதியாக நின்று இருந்த செல்வம் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பணியிலிருந்து விற்பனைப் பிரதிநிதிகளான மைதீன் மற்றும் பஷீர் இருவரையும் தாக்கியுள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் தடுக்க முயற்சி செய்தனர்.
அதன்பின் தாக்குதல் நடத்திய செல்வம் அரிவாளுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனைதொடர்ந்து காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனிடையில் தப்பி ஓடிய செல்வத்தை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு மேலாளர், விற்பனை பிரதிநிதிகளை அரிவாள் கொண்டு தாக்கிய காட்சிகள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கொண்டு தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.