சமையலில் இருந்து பெருக்குதல் வரை அனைத்து வீட்டு வேலைகளை செய்வதற்கு ஆண்களுக்கு பயிற்சி கொடுக்க இருப்பதாக கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
எல்லா வீடுகளிலும் சமையல் செய்தல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், பெருக்குதல் என அனைத்து வீட்டு வேலைகளையும் மக்கள் தினசரி செய்வது வழக்கம். இந்த பணிகளை ஆண்களை விட பெண்களே அதிகம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள அரசானது இந்த பணிகளை ஆண்களும் செய்ய அவர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளது.
இதன் மூலமாக பாலின சமத்துவத்தை நிலைநாட்ட மலையாள தேசத்து அரசு முடிவுசெய்துள்ளது. ஸ்மார்ட் கிச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை அந்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை முன்னெடுத்துள்ளது. அதன்கீழ் தான் ஆண்களுக்கு வீட்டு வேலைகளை மேற்கொள்வதற்கான செயல்முறை பயிற்சியை மாநிலம் முழுவதும் அரசு கொடுக்க உள்ளது.
அதிலும் குறிப்பாக சமையல் வேலைகளை மேற்கொள்ள அனுபவம் வாய்ந்த சமையல் கலை வல்லுனர்கள் ஆண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி கொடுக்க இருக்கின்றனர். இதனிடையில் வீட்டுக்கு தேவையான பண்ட பாத்திரங்களை வாங்க அரசு வட்டி இல்லா கடன் கொடுக்க இருக்கிறது. இந்த கடன் கணவன் மற்றும் மனைவியின் பெயரில் வழங்கப்படும். அதேபோன்று இந்த திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.