நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்காக பிங்க் நிற இலவச பேருந்து இயக்கப்படும் என புதுச்சேரி மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் பிங்க் பஸ், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவித்து இருந்தார். இதற்கிடையில் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சந்திரபிரியங்கா கூறியதாவது “புதுச்சேரியில் புதியதாக 200 பேருந்துகள் வாங்க இருக்கிறோம்.
அதில் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு என பிரத்யேகமாக பிங்க் பஸ் இயக்க மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு இருக்கிறோம். எனவே ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகத்தை போன்று இலவச பேருந்தாக இயக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பின் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக புதுச்சேரியில் பிங்க் லைசென்ஸ் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் பெண்கள் இந்த முகாம் மூலம் லைசென்ஸ் எடுக்கலாம்” என அவர் தெரிவித்தார்.