மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு பாரில் பாதாளஅறையில் மறைத்து வைத்திருந்த 17 பெண்களை மீட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில், மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அங்கு சோதனை நடத்தப்பட்டது. காவல்துறையினர் முதலில் சோதனையிட்டபோது நடனமாடும் பெண்களை கண்டுபிடிக்க இயலவில்லை.
இருந்தாலும் கூட தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், மறுநாள் காலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை ஆணையர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியை காவல்துறையினர் உடைத்தனர். இதையடுத்து ஒரு பாதாள அறையை கண்டுபிடித்தனர். மேலும் அங்கு மறைத்து வைத்திருந்த பெண்களை மீட்டனர். அந்த அறையில் ஏசி படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் பார் மேலாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.