சாலை மைய தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் பனியன் நிறுவன மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தமும் அவரது நண்பர் அஜிஸ்குமாரும் மங்கலத்தில் இருந்து அவினாசிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் கோவை-ஈரோடு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது முருகானந்தத்தின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலை மைய தடுப்பு சுவரில் மோதி நொறுங்கியது.
இதில் பலத்த காயமடைந்த முருகானந்தத்தை அருகில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உடன் வந்த அஜிஸ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அவினாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.