பேருந்திற்கு வழி விடாததால் 2 பேர் இணைந்து லாரி ஓட்டுநரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் கன்டெய்னர் லாரி ஓட்டுநரான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரியை ஓட்டி சென்றுள்ளார். இந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அலகுபாவி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து லாரியை முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது. ஆனால் சண்முகம் பேருந்துக்கு வழிவிடாமல் லாரியை ஓட்டி சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோர் கீழே இறங்கி சண்முகத்தை தாக்கியுள்ளனர். மேலும் லாரியின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி மற்றும் முன்புற கண்ணாடி மீது பெரிய கற்களை தூக்கி வீசி அதனை நொறுக்கிவிட்டனர். இதுகுறித்து சண்முகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆம்னி பேருந்து ஓட்டுநரான சிக்கேகவுடா, கிளீனர் பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் 2 பேரும் இணைந்து சண்முகத்தை தாக்கி லாரி கண்ணாடியை உடைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.