சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி பகுதியில் குமார் மற்றும் தினேஷ் ஆகியோர் நடத்தி வரும் 2 நகைக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு சிறிய அளவிலான வெள்ளி மற்றும் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நகை கடை கட்டிடத்தின் அருகிலேயே அதன் உரிமையாளரான கேசவன் என்பவரது வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கேசவனின் வீட்டுக்கதவை சிலர் தட்டியுள்ளனர்.
அப்போது தனது மகன் தான் ஊரிலிருந்து வருகிறான் என நினைத்த கேசவன் கதவை திறந்த போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நின்றுள்ளனர். அவர்கள் உன் வீட்டில் நாங்கள் கொள்ளையடிக்க வரவில்லை எனவும், நகைக்கடைகளில் தான் கொள்ளையடிக்க வந்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். அதற்கு உனது வீட்டின் சுவரை உடைத்து தான் உள்ளே போக போகிறோம் எனவும், சத்தம் போடாமல் இருந்தால் உன்னை உயிரோடு விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர்.
அதன்பிறகு கேசவனை மர்ம நபர்கள் ஒரு அறையில் அடைத்து பூட்டி விட்டனர். இந்நிலையில் வீட்டின் சுவரை உடைத்து நகை கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 23 பவுன் தங்க நகைகள் மற்றும் 12 கிலோ வெள்ளி போன்றவற்றை திருடியுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து அறைக்குள் இருந்து கேசவனின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக அவரை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.