ரயில் என்ஜினில் துண்டான நிலையில் கால் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் 5-வது நடைமேடையை வந்து சேர்ந்துள்ளது. இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரயில்வே காவல்துறையினர் ரயில் என்ஜினில் துண்டான நிலையில் மனித கால் ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டத்திலுள்ள இனாம்குளத்தூர்-ஆலம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் மூதாட்டியான சுப்பம்மாள் என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது தண்டவாளத்தில் ஓடிய ஒரு ஆட்டை காப்பாற்ற முயற்சி செய்த போது சுப்பம்மாள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இதனை அடுத்து மூதாட்டியின் கால் துண்டாகி என்ஜின் பகுதியில் விழுந்ததும், டிரைவர் அதனை கவனிக்காமல் ரயிலை இயக்கியதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.