கத்தியால் தன் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை கல்கேணித்தெரு காதர்முகைதீன் காலனியில் அப்துல் ரஹ்மான் மகன் அகமது பைசல்(28) என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தையான அப்துல் ரஹ்மான் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் அகமது பைசல் தனது தாய் ஹலீமாபானுவுடன் வசித்து வந்தார். இதில் அகமது பைசல் கூலி வேலை செய்து வந்த நிலையில் சரியாக பணி இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அகமது பைசல் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனை அவரது தாய் தடுத்து விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அகமது பைசலின் தாய் தனது உறவினரை அழைத்து வர சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அகமது பைசல் கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் பெருகவாழ்ந்தான் சிவப்பிரகாசம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அகமது பைசலின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.