மளிகை பொருட்களை ஏற்றி சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை செந்தில் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாமரைப்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அனைத்தும் சாலையில் சிதறிவிட்டது. இதில் லாரி ஓட்டுனர் செந்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர்.