சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கட்டிட தொழிலாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் நல்லூர் காவல் நிலையத்தில் மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மாணவி திருப்பூரில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் திருப்பூருக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்ற வாலிபர் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக கந்தம்பாளையத்தில் வசித்து கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் மாநிக்கவாசகத்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணிக்கவாசகம் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனைதொடர்ந்து சிறுமியை மீட்டு காப்பாத்தில் ஒப்படைத்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்துகொண்ட மாணிக்கவாசகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.