கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோபாலபுரம், நடுப்புனி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் பாதையில் கேரள மாநிலத்துக்கு செல்ல முடியும். இங்குள்ள சோதனை சாவடிகள் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் நடக்கும் என்பதால் அந்த சோதனை சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரும் , பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினரும் சேர்ந்து சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் கோபாலபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர் .அப்போது தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு ஒரு லாரி வந்தது. அதனை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை நடத்தினர் .அப்போது லாரியின் பக்கவாட்டில் சுமார் 600 கிலோ உப்பு பாக்கெட்டுகளால் மறைக்கப்பட்ட நிலையில் 16 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ரேஷன் அரிசியையும் லாரியையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் , கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரசாத் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.