பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்லத்திக்குளம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றதால் தற்போது 10 குடும்பத்தினர் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மிதலைக்குளம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்து சென்று தான் கல்லத்திக்குளம் கிராமத்தை அடைய வேண்டும்.
இங்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்களும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து பெண்களும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோரைக்குளம் கிராமத்தில் இருந்து குடிநீரை பிடித்து வருகின்றனர். மேலும் அவசர கால கட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்துத் தரவேண்டும் எனவும் பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.