Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போனா வராது பொழுது போனா கிடைக்காது! – வெங்காயம் வாங்க திரண்ட மக்கள்

 ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு வெங்காயம் வாங்கிச் சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வெங்காயம் வாங்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகளின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் வெங்காயம் கிடைக்காமல் வியாபாரிகள் அவதியடைந்து வரும் நிலையில், கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் போடப்பட்டுள்ள விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளது.

cuddalore-market

4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்ததைக் கண்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் சென்று இது உண்மைதானா?, 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா என்று அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர். அதற்கு கடை உரிமையாளர் பலகையில் எழுதி இருப்பது போல் 4 கிலோ வெங்காயம் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது உண்மை என்றும், 1 கிலோ வெங்காயம் 25 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியதை அடுத்து, காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்துக்கொண்டு, வெங்காயத்தை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதன் விளைவாக வரலாறு காணாத அளவில் விலை ஏறியது. இதன் காரணமாக எங்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவு வெங்காயம் வந்து கொண்டிருந்தது. மேலும் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவே வெங்காயம் வாங்கிச் சென்றனர்.

இன்று காலை பெங்களூரு பகுதியிலிருந்து இரண்டு லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. பெங்களூருவில் இருந்து தாங்கள் எந்த தொகைக்கு கொள்முதல் செய்திருக்கிறோமோ அதே தொகைக்கு விற்பனை செய்கிறோம் என்றும் பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றோம் என தெரிவித்தார்.

Categories

Tech |