சென்னையில் காதலனுடன் அளவுக்கு மீறிய பழக்கத்தால், கர்ப்பமான இளம்பெண் பெற்றோருக்கு பயந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால், வயிற்றிலிருந்த ஆண் சிசு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண் தொழிற்பேட்டையில் உள்ள ஐடிஐ-யில் பயின்று வந்துள்ளார்.
இந்தநிலையில், இன்று காலை 8 மணி அளவில் வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. கீழே விழுந்து கிடந்த பெண்ணின் அருகே ரத்தவெள்ளத்தில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் ஒரு ஆண் சிசு கிடந்துள்ளது. காவல்துறை விசாரணையில், காதலுடனான அளவுக்கு மீறிய பழக்கத்தால், கர்ப்பமான அவரை, விஷயம் தெரிந்த உடனே காதலன் கை விட்டுள்ளார்.
மேலும் இதுநாள் வரை கருவுற்றது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வைத்துள்ளார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென வலி ஏற்பட்டதால், பெற்றோருக்கு பயந்து மாடியில் இருந்து குதித்துள்ளார். இதையடுத்து குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. மேலும் இளம்பெண்ணின் காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.