விதிமுறைகளை மீறிய ஜவுளி கடைக்கு அதிகாரிகள் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகர கிழக்கு காவல்நிலையம் அருகில் உள்ள கமலிகா சில்க்ஸ் என்ற ஜவுளி கடை அமைந்துள்ளது. இந்த கடையின் 100-வது திறப்பு நாளை முன்னிட்டு சேலை ரூ. 50-க்கும், வேட்டி ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்தனர். இதற்காக டோக்கனும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக நின்றனர். இந்நிலையில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொதுமக்கள் ரோடு வரை நின்றதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செந்தில்குமார், ஜெயபாரதி போன்றோர் அந்த கடைக்கு விரைந்து சென்று பொதுமக்களை எச்சரித்தனர். இதனையடுத்து முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொதுமக்களை நிற்க வைத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஜவுளி கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.