புதுச்சேரி குருசுகுப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். நேற்று காலை, இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இன்று காலை குருசுகுப்பம் மீனவர்கள், லோகநாதனின் உறவினர்கள் பட்டேல் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அதன்பின், தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.