டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 60க்கும் மேலானோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு போன்றவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் வடக்கில் உள்ள கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிலிருந்து வெளியேறிய பெட்ரோலை பாத்திரங்களில் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென்று ஏற்பட்ட தீயினால் லாரி வெடித்து சிதறியுள்ளது. அதில் 60 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக விபத்து நடைபெற்ற பகுதியில் இருக்கும் சாலையில் பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் கிடந்துள்ளன. இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேலானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதிலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது. தற்போது மீட்பு நடவடிக்கைகளானது முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி கூறியதில் “இந்த சம்பவம் தேசிய பேரழிவாகும். குறிப்பாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூன்று நாட்கள் நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.