இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் வதந்தி என்று தெரிவித்தார். மேலும் , தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி விட்டு, ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.