புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மது பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் கண்ணன் தலைமையில் திசையன்விளை பகுதியில் வசிக்கும் பெண்கள் வந்துள்ளனர். இந்தப் பெண்கள் கையில் மதுபாட்டில்களை ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெண்களின் கையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது அந்த மது பாட்டில்களில் குளிர்பானம் நிரப்பி வைத்திருப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பெண்கள் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சுமார் 10 ஆயிரம் குடும்பத்தினர் திசையன்விளை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஏற்கனவே 2 அரசு டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. தற்போது எருமைகுளம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி-கல்லூரி, இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளதால் மது பிரியர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.