வரும் 17ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு, உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.. மேலும் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி மழை பெய்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக மழை குறைந்து வருகிறது..
இந்நிலையில் வரும் 17ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக அகரம் சீகூர் மற்றும் மதுராந்தகத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.