மோசடி செய்த இன்ஜினியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டிட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் இன்ஜினியர் ஒருவரிடம் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். தொடக்கத்தில் வேலை பார்த்ததற்கான சம்பள பணத்தை இன்ஜினியர் சரியாக கொடுத்தார். இதனால் அடுத்தடுத்து கட்டிடம் கட்டுமான பணிக்கு நாங்கள் சென்றோம்.
இந்நிலையில் சுமார் 6 வீடுகளை கட்டி முடித்தபிறகு இன்ஜினியர் சம்பள பணத்தை தராமல் தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து எலக்ட்ரீசியன், பெயிண்டர், கதவு பாலிஷ், மேஸ்திரி உட்பட 9 பேருக்கு 8 லட்ச ரூபாய் வரை கொடுக்காமல் இன்ஜினியர் மோசடி செய்துள்ளார். இதனால் 50-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மோசடி செய்த இன்ஜினியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.