இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றானது தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா வகை கொரோனா தொற்றுக்களை விடவும் மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரான் இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு வந்த 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கென்யாவை சேர்ந்த 24 வயது பெண், சோமாலியா நாட்டை சேர்ந்த ஒருவர், கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத் வந்த 7 வயது சிறுமி என 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் 10-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 11-ஆம் தேதி 33 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு 4 நாட்களுக்குள் இரு மடங்கு அதிகரித்து இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பாதிப்புள்ள பகுதிகளை கண்டறிந்து உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.