தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த செல்லத்துரையும் தம்பிக்கோட்டை கீழக்காடு முகவரியைச் சேர்ந்த இந்துமதியும் 9 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார். இதுதொடர்பாக செல்லத்துரை வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில், இந்துமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்துமதியை செல்லத்துரை தன்னுடன் அழைத்து வந்து வசித்து வந்தார். அதன் பின்னர், கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்துமதி நாகை மாவட்டம் ஆனைமலை மேலே தெருவை சேர்ந்த தனது சகோதரி வீட்டிற்கு நேற்று சென்று தங்கி இருந்துள்ளார். இதை அறிந்த செல்லத்துரை நேற்று இரவு ஆய்மழைக்கு வந்து தனது மனைவியுடன் குடிபோதையில் சண்டை போட்டுள்ளார்.
இதையடுத்து இன்று காலை இந்துமதியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இந்துமதி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த செல்லத்துரை, இந்துமதியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். அவர் அம்மிக்கல்லை தூக்கி போட்டதில் இந்துமதி பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட இந்துமதியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.