சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் போதே கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பால்வாடி விரிவு பகுதியில் இசக்கி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த குடும்பத்தினர் மீண்டும் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்து இசக்கிமுத்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஜி.எஸ்.டி சாலையின் ஓரமாக காரை நிறுத்திவிட்டு இசக்கி முத்துவும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக கீழே இறங்கிவிட்டனர்.
இதனை அடுத்து கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முற்றிலுமாக எரிந்துவிட்டது. காரில் புகை வந்தவுடன் குடும்பத்தினர் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.