கர்ப்பிணியாக இருந்த மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் 21 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி.ஐ-யில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவி தனது வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். மேலும் அந்த மாணவிக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்து கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அதாவது மாணவி செங்கல்பட்டில் வசிக்கும் வாலிபரை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்ததால் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எனவே கர்ப்பிணியாக இருந்த மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது விரக்தியில் தற்கொலைக்கு முயன்றாரா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.