பட்டபகலில் அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை ஒட்டிய பாச்சலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற 2 மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளார். மூன்று பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பிரித்திகா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் மூன்று பேரும் பள்ளிக்கு சென்றனர். காலை 11 மணி அளவில் பிரித்திகா வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
அதன்பின் வகுப்பறைக்கு திரும்பவில்லை. இதை தொடர்ந்து மாணவி பிரித்திகா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்த ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையின் தந்தைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சத்யராஜ் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது? அவரை யாரேனும் எரித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் 10 வயது சிறுமி மைதானத்தில் கருகிய நிலையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.