காட்டு யானைகள் அரசு பேருந்தை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூரிலிருந்து கெத்தை வழியாக கரமடைக்கு செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதனால் இந்த சாலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு மஞ்சூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதனை அடுத்து மஞ்சூர்-கோவை சாலை பெரும்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குட்டியுடன் வந்த 4 காட்டு யானைகள் பேருந்தை வழிமறித்தது. இதனால் சிறிது தூரத்திலேயே பேருந்து ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டார். இதையடுத்து காட்டு யானைகள் மண் பாதை வழியாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.