சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வீரகேரளம்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியில் இருக்கும் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் வீராணம் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.