வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள புதுபெருங்களத்தூரில் பரமேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மகனின் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் திண்டுக்கல் சென்றுள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவருக்கு கைபேசியின் மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பரமேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில்லிருந்து விரைவாக புறப்பட்டு தாம்பரத்திற்கு வந்துள்ளார்.
அதன்பின் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்படாமல் சாவியால் திறக்கபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பீரோவிலிருந்த ரூபாய் 25 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பரமேஸ்வரன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.