பணியின்போது உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு கமிஷனர் நிதியுதவி தொகைக்கான வரைவோலையை வழங்கியுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள தலைமை செயலக காலனி காவல்துறை அதிகாரியான எஸ்.ஐ. பாபு கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.ஐ. பாபு உயிரிழந்துவிட்டார். இவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் வரைவோலையை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கியுள்ளார்.
மேலும் பணியின் போது உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த சென்னை பெருநகர காவல் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, சிறப்பு பிரிவுகள் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரிந்த 30 காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் என மொத்தம் ரூபாய் 90 லட்சம் நிதியுதவி வழங்க ஒப்புதல் பெறப்பட்டது.
இதனையடுத்து பனியின் போது இறந்த 2-ம் நிலை காவல்துறையினரின் குடும்பத்திற்கு ரூ.90 லட்சம் என மொத்தம் ரூபாய் 1 கோடியே 15 லட்சத்துக்கான வரைவோலையை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கியுள்ளார். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் பிரபுவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5.2 லட்சம் போலீஸ் நல நிதியிலிருந்து ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.