Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாக்கடையில் கிடந்த பர்ஸ்”…. தூய்மை பணியாளார்களின் நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!

சாக்கடையில் கிடந்த மணி பர்ஸை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் பின்புறம் உள்ள வீதிப் பகுதியில் காலை 6 மணியளவில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் வெள்ளையன், அய்யப்பன்  ஆகிய 2 பேரும் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் சாக்கடையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்ததை அவர்கள் 2 பேரும் பார்த்தனர். இதனையடுத்து அவர்கள் பர்ஸை திறந்து பார்த்தபோது அதில் 2 செல்போன்கள் மற்றும் 2 ஏடிஎம் கார்டுகள் இருந்தது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும் துப்புரவு ஆய்வாளர் குணசேகரனிடம் கூறினர்.

இதனைத்தொடர்ந்து 3 பேரும் காவல் நிலையம் சென்று அந்த மணி பர்ஸை அங்கிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு சாக்கடையில் கிடந்த செல்போன்களை ஒப்படைத்த தூய்மை பணியாளர்கள் அய்யப்பன், வெள்ளையன் ஆகியோரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாராட்டினார். இதற்கு முன்பாக அந்தியூர் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவர் தனது வீட்டில் இருந்த 2 செல்போன்கள் மற்றும் 2 ஏடிஎம் கார்டுகள் திருட்டு போயிருந்ததாக காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.

ஆகவே சாக்கடையில் கிடந்த செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் நந்தினி உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி அவருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி நந்தினி போலீஸ் நிலையம் விரைந்து சென்று தனது செல்போனின் அடையாளங்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளில் இருந்த பெயர்களை தெரிவித்தார். அதன்பின் காவல்துறையினர் அவர் கூறிய அடையாளங்களை வைத்து பரிசோதனை செய்து பார்த்தபோது அது நந்தினிக்கு சொந்தமான பொருட்கள் என்பதை உறுதி செய்தனர். இதனால் காவல்துறையினர் நந்தினியிடம் செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை ஒப்படைத்தனர்.

Categories

Tech |