ஏழுமலையான் திருக்கோவிலில் ஆர்ஜித சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சுவாமி தரிசனம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த வருடம் சில மாதங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. அதேசமயம் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெற்று வரும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, அபிஷேகம், கல்யாண உற்சவம் போன்ற ஆர்ஜித சேவைகளில் கலந்துகொள்ள கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து பக்தர்களின் தரிசனம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதற்கிடையில் ஆர்ஜித சேவைகள் மட்டும் தொடங்கவில்லை. எனினும் சகஸ்கர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், கல்யாண உற்சவம் போன்ற சேவைகள் மட்டும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. ஆகவே ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியாது. தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை பெரிதும் குறைந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதை பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை செய்தது. அதில் அடுத்த வருடம் சங்கராந்தி முதல் ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.