கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளத்தில் சேர்ந்தவர் ஜோசப். ஜோசப் ஒரு தனியார் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பி வந்த ஜோசப், மேலும் 5 ஆண்டுகள் விடுமுறை வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஜோசப், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஏகே. ஜெயசங்கர் நம்பியார் மற்றும் சிபி முஹம்மது நியாஸ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பேசியதாவது, நீண்ட நாள் விடுமுறையில் செல்லும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் கேரள கல்வி சட்ட விதி எண் 56(4) பிரிவைத் தான் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து 5 ஆண்டுகள் விடுமுறை முடிந்த பின்னரும், பணியில் சேராத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யவும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் பள்ளி நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான் என்று தீர்ப்பு கூறிய நீதிபதிகள் ஆசிரியர் ஜோசப்பின் மனுவை தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளார்.