ரயில்வே நிலையத்தில் செவிலியர் பெண்ணிடம் 7 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருவள்ளூர் பகுதியில் இருக்கின்ற திருநின்றவூர் பொது சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நெமிலிச்சேரியில் இருக்கின்ற துணை சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக மின்சார ரயில் மூலமாக சென்றிருக்கிறார்.
அப்போது ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று சாந்தியை பிடித்து கீழே தள்ளி விட்டு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது பற்றி சாந்தி ரயில்வே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பின்னர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் ரயில்வே காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் அவர் திருவலங்காடு சின்னம்மா பேட்டை பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பதும், நெமிலிச்சேரியில் செவிலியரிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து வந்ததும் காவல்துறையினர் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்துள்ளனர்.