முன்னாள் அமைச்சர் தங்கமணிசொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முறைகேடாக பெருமளவில் கிரிப்டோ கரன்சியை பணம் சேர்த்துள்ளதாக முதல் அறிக்கையில் தகவல் வெளியானது. எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய வீட்டிலிருந்து பணம், தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று தெரியாது என்றும், தனது வீட்டிலிருந்து செல்போனை மட்டுமே எடுத்து சென்றனர் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கிரிப்டோகரன்சி ஊழல் பணத்தை முதலீடு செய்த அரசியல்வாதி என இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு பதிலளித்தால் பரவாயில்லை. கண்பார்வையில் இருந்து காணாமல் போன நிலக்கரிக்கும், கண்ணுக்கு தெரியாத கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும் “கிரிப்டோ மணி” முதலில் பதில் சொல்ல வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.