எட்டு மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக 8 மாதங்களாக குமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் அரவின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
பாசி பிடித்த இடங்கள் மற்றும் சுற்றுப்புற தூய்மை படுத்தப்பட்டன. மேலும் விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வேண்டும் என்றும், அங்குள்ள கடைகளில் சானிட்டைசர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று முதல் திற்பரப்பு அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.