முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் தக்காளி சாதம் போட்டதால் அதிமுகவினர் டென்ஷனாகி உள்ளார்களாம்
திமுக ஆட்சி வந்த பிறகு ஸ்டாலின் சொன்னது போல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகிறது. அதன்படி எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் அடுத்தது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வகையில் ஐந்தாவது நபராக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிக்கினார். அவருக்கு சொந்தமான 65 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. அதில் 2.16 கோடி மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் முன்கூட்டியே சோதனை நடத்துவார்கள் என்பதற்காக அனைவரும் உஷாராகவே இருக்கின்றன. இதுகுறித்து தங்கமணி நெருக்கமான வட்டாரத்தில் தெரிவித்ததாவது இந்த சோதனையை அவர் எதிர்பார்த்துதான் காத்திருந்தார். அதனாலேயே சோதனையை அவர் கூலாக எதிர்கொண்டார். இது ஒருபுறமிருக்க வேலுமணி தங்களது தொண்டர்களை குவித்து பரபரப்பு ஏற்படுத்தியது போல, தங்கமணியும் அதே பாணியில் சென்று கெத்து காட்டியுள்ளார். தங்கமணியின் உத்தரவின் பேரில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர்.
அவர்களுக்கு மதிய உணவாக தக்காளி சாதம், தயிர் சாதம், ஊறுகாய் போன்றவற்றை வழங்கப்பட்டது. மாலை நேரத்தில் கீரை போண்டா வழங்கப்பட்டது. போராட்டத்திற்கு வந்தவர்களுக்கு வெறும் தக்காளி சாதம் வழங்கப்பட்டதால் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இதுகுறித்து தங்கமணி வீட்டு முன் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் “வேலுமணி வீட்டுக்கு போராட்டத்துக்கும் போனோமுங்க அங்க பிரியாணி போட்டங்க, ஆனா, தங்கமணி வீட்டில வெறும் தக்காளி சோத்தோட நிறுத்திட்டாங்க. எங்கள பொறுத்தவரைக்கும் போராட்டம்னா கூப்புட்டா போவோமுங்க. போனா எதாவது எங்களுக்கு பண்ணனும்ங்க. அது இல்லன்னா எப்புடிங்க?” என்று கேள்வி எழுப்புகிறார். இது மிகவும் கேளிக்கையாக இருந்தது.