தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி வந்த பின் அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள மக்களுக்கு சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் பணிகளை செய்ய முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதையும் அரசு தன் குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. அதில் அரசின் பல நலத்திட்டங்களை மக்களை சென்றடையும் மிகப் பெரிய பணியை ரேஷன் கடைகள் செய்து வருகிறது.
இதன் காரணமாக அது தொடர்பான பல புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசியை தயார்படுத்தும் ஆலைகள் முன்னதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிநவீன தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு தரமான அரிசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இந்த பணிகளை மேற்பார்வை செய்வதற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர்கள், தரக்கட்டுப்பாட்டு மேலாளர்கள், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூலக வளாகத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான மற்றும் சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும் என்று கூறினார். இதில் தரம் குறைந்த அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டால் அதனை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி முதுநிலை மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் பொருட்களை உடனே பெற்று அவற்றை முறையாக பராமரித்து மக்களுக்கு வழங்க வேண்டும். ஆகவே பொருட்களின் தரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அரிசி வழங்கும் ஆலைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக அரிசி மூடைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதன்பின் திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அங்கும் அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தரமான பொருட்களை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.